Saturday, June 19, 2021

லெமூரியன் - தமிழ் சிறுகதை

                                                         லெமூரியன் 


ஆழி தன் எண்ணிலடங்கா அலைக்கரங்களுடன் ஆர்ப்பரித்து இரவின் அமைதியை ஊடுருவியது. இரவின் மடியில் உறங்கும் வானில் காரிருள் சூழ்ந்திருந்தது. நட்சத்திர திட்டுக்கள் வானை அலங்கரித்து மலர்ச்சரம்  போன்ற தோற்றத்தை அளித்தது.   முழு நிலவு கடல் நீரில் தன் வெளிச்சத்தை சிதறடித்துக் கொண்டிருந்தது. நிலவின் வெளிச்சமும் இரவின் கருமையும் சேர்ந்ததால்  கடல் மெல்ல தன் நீலச் சாயத்தை உதறியது. வான், நீர், நிலவு, நட்சத்திரம் இவை அனைத்தும்  குழந்தையைத் தழுவும் தாயின் உவகையுடன் கடலை அணைத்திருந்தது.


அவ்விரவில் கடலில் ஒரு  படகு மிதந்தது. சிற்றலைகள் படகைத் தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தது. படகில் படுத்திருந்த  சூசை தன் மனதின் வெறுமையை இயற்கை பிரதிபலிப்பதை உணர்ந்தான். எத்தனையோ நாட்கள் சூசை  படகிலிருந்து குதித்து தன்னை மரித்துக் கொள்ள தோன்றும் தூண்டுதலை வென்றிருக்கிறான். இன்று அவன் மனதில் அவ்வெண்ணங்கள் இல்லை. தான் இல்லை என்றால் குரூஸின் நிலை என்னவாகும். தன்னை நம்பி ஒரு ஜீவன் இருப்பதன் பொறுப்புணர்ந்தான்.


குரூஸின் நினைவு வந்ததும் அவன் படகை கரை  நோக்கி செலுத்தினான். சில மணி நேரங்களில் கரையை அடைந்தான். முட்டம் என்ற பெயர் கொண்ட அக்கிராமம் கன்யாகுமாரியிலிருந்து 30 கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. பிறந்ததிலிருந்து அவன் தாத்தா குரூஸ் அங்கு  தான் வாழ்ந்திருக்கிறார். 

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் சற்றும் இல்லை. நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன.


சூசை  வேகமாக நடந்து தன் குடிசையை அடைந்தான். குரூஸ் உறக்கம் வராமல் படுத்திருந்தார். பாத்திரத்தில் வஞ்சிர மீன் குழம்பும், அரிசியும் இருப்பதை பார்த்தான். தனக்கும், குரூசுக்கும் தட்டில் உணவு எடுத்து அமர்ந்தான். இருவரும் அமைதியாக உண்டனர்.


கிழவருக்கு சில நாட்களாக உடல்நிலை நலிந்துக் கொண்டிருந்தது. இரவு நேரங்களில்  கடும் காய்ச்சலும், தொடர் இருமலும் அவரை படுத்தியது. மருத்துவர் அவர் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக கூறினார்.


உணவு முடித்து இருவரும் படுத்தனர். சூசைக்கு  உறக்கம் வரவில்லை. குரூஸ் மெல்ல பேச ஆரம்பித்தார்.


"என் மகள் அதாவது உன் தாய் இறக்கும் போது உனக்கு 4 வயது.  இரண்டே மாதங்களில்  உன் தந்தையும் இறந்தார்.  உன் தந்தை கிருத்துவ நாடார். நாங்கள் மீனவ சமூகம். பாழாய் போன ஜாதி பிரச்சினை இருவரையும் பலி வாங்கி விட்டது.  பத்து வருடங்களாக உன்னை நான் வளர்த்து வருகிறேன்.நான் போய் சேரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உன்னை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது."


சூசை  அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் எந்த சலனமும் தெரியவில்லை.


"நீ யாருடனும் பேச மாட்டேன் என்கிறாய். என்னிடம் கூட ஓரிரு வார்த்தைகள் தான். நான் இறந்த பிறகு நீ எப்படி சமாளிப்பாய். உனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. எந்தப் பெண் மீதும் உனக்கு நாட்டம் இல்லை. ஏன் இப்படி இருக்கிறாய். உன்னை நான் சரியாக வளர்க்கவில்லையா."


"எனக்கு  நாய் , கோழி, ஆடு, மாடு கூட பிடிக்கும். ஆனால்  மனிதர்கள் பிடிக்காது. ஒவ்வொருவரும் ஒரு முகமுடியுடன் தான் அலைகிறார்கள். அவர்கள் போலித்தனத்தை கண்டால் எனக்கு ஒவ்வாமை வருகிறது. என் பெற்றோரை வாழ விடாத இந்த மனித சமூகம் அழிந்தால் என்ன என்று கூட தோன்றுகிறது.  மனிதர்களே இல்லாத கடலில் தான் என் மனதில் அமைதி நிறைகிறது."


குரூஸ் கண்ணில் கண்ணீர் வழிந்தது.


"என்னையும் வெறுக்கிறாயா."


சூசை  அவர் நெற்றியை தடவிக் கொடுத்தான்.


"தாத்தா. நீ எனக்கும் வெறும் மனிதன் இல்லை. சாமி. அதற்கும் மேல்."


கிழவர் திரும்பி படுத்துக் கொண்டார். சூசை  சில நிமிடங்களில் உறங்கி விட்டான்.


காலையில் எழுந்ததும் சூசை  குரூஸைப் பார்த்தான். அவர் அசைவில்லாமல் இருந்தார். அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆகியிருந்தது.


 குரூஸ் இறந்து இரண்டு வாரங்கள் கழிந்தது. அதன் பிறகு இன்று தான் சூசை கடலுக்கு வந்திருக்கிறான். பெரும் மழை பெய்துக் கொண்டிருந்தது. அலைகள் பெரும் உக்கிரத்துடன் வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. மாறி மாறி வந்து கொண்டிருந்த அலைகளின் எழுச்சியிலும் தாழ்விலும் சூசையின் படகு நிலையிழந்துக் கொண்டிருந்தது.


சூசையின் கண்களில் எந்த உணர்வும் தெரியவில்லை. அவன் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பேரலை படகைக் கவிழ்த்தது. சூசை  கடலின் ஆழத்திற்குள் சென்று கொண்டே இருந்தான்.


திடீரென அவன் தன்னை  இரு கரங்கள் பற்றி மேலே இழுத்து வருவது போல உணர்ந்தான். மெல்ல தன் சுய நிவை இழந்தான்.

                        

                                          ———*********———-


சூசை  கண் விழித்ததும் தான் ஒரு கடற்கரையில் இருப்பதை உணர்ந்தான். சூரியன் வானில் மேலெழுந்துக் கொண்டிருந்தது. விடிந்து சற்று நேரம் தான் ஆகியிருக்க வேண்டும்.


கடற்கரை தாண்டி சற்று தூரத்தில் மூங்கில் காடு இருந்தது. எங்கும் ஆள் நடமாட்டம் இல்லை. அது ஒரு தீவாக இருக்க வேண்டும். எந்த மனிதனின் கால் தடமும் பதியாத தீவு.  


தான் இந்நேரம் இறந்திருக்க வேண்டும். மேலுலகில் குரூஸ், தாய், தந்தையுடன் இணைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இவ்வுலகில் நிகழ்த்த வேண்டிய கடமைகள் இன்னும் முடிவுறவில்லை.  


சூசை  எழுந்தான். கை கால்களை  அசைப்பதில் சிரமமிருந்தது.  மூங்கில் காட்டுக்குள் நுழைந்தான். பறவைகளின் சிறகடிப்பின் சத்தம் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை.  ஆங்காங்கே முட்புதர்கள் மண்டி இருந்ததால் கவனமாக நடக்க வேண்டி இருந்தது.


தன்னை யாரோ பின் தொடர்வதாக பிரமை தோன்றியது. சுற்றிலும் தேடிப்  பார்த்தான். யாருமில்லை.  மீண்டும் நடந்து முடிவில் ஒரு குகை முன் நின்றான் . உள்ளே நுழைந்ததும் வௌவால் ஒன்றின் அலறல் கேட்டு சூசை  திடுக்கிட்டான். தன்னை ஆசுவாசம் செய்து கொண்டு குகை முழுதும் ஆராய்ந்தான். அங்கே யாரும் இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. 


மீண்டும் கடற்கரை திரும்பினான். மூங்கில் காட்டின் எதிர் திசையில்  வாழை, தென்னை மரங்கள்  தெரிந்தன. பழங்கள் உண்டு பசியைப்  போக்கிக் கொண்டான். அன்று இரவு நல்ல உறக்கம் வந்தது.


அடுத்த நாள் அந்த தீவை ஆராய வேண்டும் என்று முடிவு செய்து பல தூரங்கள் நடந்தான். நேரம் இரவை நெருங்கியது. ஏதோ தோன்ற குகை இருக்கும் திசை நோக்கி திரும்பினான். 


குகைக்குள் சிறிது தூரம் சென்ற பின் ஓரிடத்தில் பாறை தெரிந்தது. நேற்று ஏனோ அதை கவனிக்கவில்லை. அந்தப் பாறையை பெரும் சிரமத்துடன் அகற்றியதும் கீழ் நோக்கி படிகள் நீண்டு சென்றது. சூசை  படியில் இறங்கினான் . படிகள் வளைந்து வளைந்து சென்றன. படிகள் ஒரு விசாலமான அறைக்கு அவனை கொண்டு சேர்த்தது. அங்கே இரண்டு பாறைகள் சிம்மாசன வடிவில் இருந்தன. அருகில் பலர் அமரக் கூடிய கற்பாறைகள் தெரிந்தன. சுவர் முழுதும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது. நடனமாடும் சிவன் ஓவியம் ஒன்று பெரிதாக சுவரின் நடுவில் இருந்தது.


ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்த சூசை  சட்டென சிம்மாசனம் நோக்கி திரும்பினான். அங்கே ஒரு உருவம் அமர்ந்திருந்தது. அதற்கு  நெற்றியில் ஒரு கண் இருந்தது. உடலில் துணி  எதுவும் அணியாத அதற்கு ஆண், பெண் இருவரின் ஜனன உறுப்பும் இருந்தது.


சூசை  அதிர்ச்சியில் அங்கிருந்த ஓட ஆரம்பித்தான். சுவற்றில் வேகமாக முட்டி மயக்கமுற்றான்.


சூசை  கண் விழித்ததும் தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். சில நிமிடங்களில் மூன்று உருவங்கள் அவன் முன் தோன்றியது.


அவர்கள் பார்ப்பதற்கு மனிதர்கள் போலவே இருந்தனர். ஆனால் ஒவ்வொருவரும் எட்டு அடி உயரம் கொண்டவர்களாக, நெற்றியில் மூடிய மூன்றாவது கண் ஓன்று இருந்தது. அவர்களில் ஒருவன் தலைவனாக இருக்க வேண்டும்.


"நீங்கள் யார். உங்களைப் போன்ற ஜந்துக்கள் இதுவரை இந்த பூமியில் யாரும் பார்த்ததில்லை.  நீங்கள் வேற்றுக் கிரகவாசிகளா?"

அவர்களின் தலைவன்  பழங்காலத்து  தமிழில் பேச ஆரம்பித்தான்.


"நாங்கள் இந்த பூமியின் ஆதிக் குடி. மனித இனம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரே இந்த பூமியை ஆண்டுக் கொண்டிருந்தோம். எங்களை லெமூரியர் என்று அழைப்பர்."


"நீங்கள் இந்த குகையில் மட்டும் தான் வாழ்கிறீர்களா?"


"எங்கள் இனத்தின் பேரழிவிற்கு பின் 100  பேர் மட்டுமே எஞ்சினர். அவர்களின் வம்சாவளிகளாக நாங்கள் இந்த தீவில் வசித்து வருகிறோம். இங்கு மேலும் சில குகைகள் உள்ளன. அவற்றில் மற்ற லெமூரியர்கள் வசிக்கிறார்கள்."


"இந்த தீவில் உங்களைத் தவிர மனிதர்கள் யாரும் வசிக்கிறீர்களா?"


"இல்லை. இந்த தீவை மனிதர்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாது. நீ சிறப்பான இயல்பு கொண்டவன். அதனால் விதி  உன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது."


"லெமூரியனே. என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?"


"மற்றவர்களுடன்  விவாதித்து முடிவு செய்வேன். அவர்களிடம்  உன்னை இந்த சிறையிலிருந்து விடுவிக்க சொல்கிறேன். என் பெயர் கந்தன். என்னை அவ்வாறே அழைக்கலாம்."


அடுத்த நாள் கந்தன் சூசையை  சந்திக்க வந்தான்.


"உன்னை விடுவிப்பதில் என் இனத்தவருக்கு விருப்பமில்லை. எப்படியோ உன்னை திருப்பி அனுப்ப அவர்களை சம்மதிக்க வைத்தேன். இன்று முதல் நீ சுதந்திர மனிதன்."


"என் இடத்திற்கு திரும்ப செல்ல விருப்பமில்லை. இந்தத் தீவிலேயே ஒரு குடிசை அமைத்து தங்கிக் கொள்ளலாமா?"


"நான் கூறியது போல நீ சுதந்திர மனிதன். உன் விருப்பப்படி செய்யலாம். நீர் எடுத்த முடிவு எனக்கு பிடித்திருக்கிறது. நாம் மீண்டும் சந்திக்கலாம்.”


ஆம். நாம் பேச வேண்டிய கதைகள் பல உள்ளன."


சூசை குகையை விட்டு வெளியேறினான். ஒரு குடிசை அமைத்து தீவில் புது வாழ்க்கையை தொடங்கினான். அவனை சந்திக்க கந்தன் சில நாட்கள் கழித்து வந்தான்.


"உங்களின் இந்த மூன்றாம் விழி ஏன் மூடியே இருக்கிறது."


"எங்கள் மூதாதையர் தியானத்தில் ஈடுபடுவதுண்டு. தியானம் தீவிர நிலை அடையும் போது இவ்விழி திறக்கும். அப்போது அளவிலா ஆற்றலை அடைவர். இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மைகள், ஆதார விதிகள் குறித்த ஞானம்  அனைத்தும் ஒரு கணத்தில்  அடைவர்."


"இப்போதும் நீங்கள் தியானத்தில் ஈடுபடுவதுண்டா."


"அகத்தியன் பரம்பரையில் வந்த மூதறிஞர் ஒருவர் 200  ஆண்டுகளாக எங்கள் குகையின் ஒரு அறையில் தியானம் செய்து வருகிறார். அடுத்த முறை உனக்கு அவரை காட்டுகிறேன்." 


"அகத்தியன் பரம்பரையா?"


"எங்கள் இனத்தில் ஆண்கள் நான்கு குலங்களைச்  சேர்ந்தவர்கள். சிவன் பரம்பரையினர்  தலைவர்களாகவும், கந்தன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தளபதிகளாகவும், அகத்தியன் பரம்பரையைச் சேர்ந்தவர் ஞானிகளாகவும், கிழார் இனத்தைச் சேர்ந்தவர் உழைப்பாளிகளாகவும் உள்ளனர். என் பெயர் கந்தமாறன், என் தந்தை பெயர் கந்தவேலன். எங்கள் இனத்தின் வீரர்களுக்கு தலைவனாக நான் இருக்கிறேன்.


"பெண்கள்?"


"பெண்கள்  பல இனத்தவர்களாக உள்ளனர்."


"உங்கள் தலைவர் யார்."


"அவர் பெயர் சிவநாதன். தற்சமயம் இங்கில்லை. கைலாயம் என்ற பனி மலையில் தியானித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் எங்கள் இனத்தின் உற்சவத்தின் போது கலந்து கொள்வார். அவர் சார்பாக தலைமைப் பொறுப்பை நான் ஏற்று வருகிறேன்.”


"உங்களை வழி நடத்தும் பொறுப்பை விட்டு கைலாயத்தில் என்ன செய்கிறார்?"


"நாங்கள் மனிதர்களிடமிருந்து தனித்து இருக்கிறோம். எங்கள் தலைவர் உங்களுடன் நடமாடி வாழ்ந்து  இருக்கிறார். உங்கள் உலகத்தில் நடக்கும் செய்திகள் அனைத்தும்  அவர் மூலமே அறிவோம்."


"மனிதர்கள் அடைந்த விஞ்ஞான வளர்ச்சி பற்றி எல்லாம் கூறினாரா?"


"இப்பிரஞ்சத்தின் அறிவியல் விதிகள் அனைத்தும் எண்ணினத்தவர் அறிவர். தியானத்தில் நாங்கள் அடைந்த ஞானத்தின் ஒரு துளி கூட மனிதன் அறிய மாட்டான். ஆனால் எங்களிடம் ஒரு கட்டுப்பாடு உள்ளது. அறிவியலைக் கொண்டு ஒரு போதும் மகத்தான கருவிகள் உருவாக்கக் கூடாது என்று எங்கள் முன்னோர் கூறி வந்தனர். வாழ்வதற்கு தேவையான அடிப்படைகள் தவிர வேறு எதற்கும் யாம் அடைந்த ஞானத்தை பயன்படுத்தக் கூடாது என்பது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட சட்டம்."


"ஏன். இம்மாதிரியான  காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்துவதில் என்ன ஆதாயம் உள்ளது."


"நண்பரே காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்வது நீங்கள். இயற்கையை ஒத்து வாழும் பண்பாடு எங்களுடையது. மனிதரைகள் இயற்கையை சுரண்டி, சக மனிதனை சுரண்டி நடத்தும் அதர்ம வாழ்க்கை மனித இனத்தை மட்டும் அல்ல இந்த புவியையே அழிக்கும்."


"நீங்கள் ஏன் மனிதர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டீர்கள். உங்கள் வரலாறு என்ன?"


"பல்லாயிரம் ஆண்டுகள் முன் இங்கே குமரிக்கண்டம் என்ற நிலம் இருந்தது.  அந்நிலத்தில்  எங்கள் இனமும், மனித இனமும் சேர்ந்து வாழ்ந்தனர். மனித இனத்தை பாண்டிய மன்னர்கள் அரசாண்டனர். பாண்டிய நாட்டுடன் எங்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. எங்கள் இனத்தவரிடமிருந்த பேரறிவை பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக இலக்கியத்தை வளர்க்க அவர்கள் அமைத்த சங்கத்தின் நிகழ்வுகளில் அகத்தியனும், சிவனும், கந்தனும் பங்கு பெற்றனர். மேலும் எதிர்காலத்தை குறித்த கணிப்புகளும் அறிந்து கொண்டனர். பாண்டிய மன்னன் மகள் மீனாட்சியை சிவன் மணந்த வரலாறும் உண்டு. ஆனால் இந்த நல்லுறவு வெகு நாட்கள் நீடிக்கவில்லை”.


"என்ன காரணம்?"


"வடக்கே இருந்த ராஜ்யங்களிடேயே நடந்த போர்களில் பாண்டிய அரசும் ஏதாவது ஒரு பக்கம் சார்ந்து பங்கெடுத்தது. இதை எதிர்த்து எங்கள் தலைவர் பாண்டிய மன்னரிடம் பலவாறு கேட்டுக் கொண்டும் அவர் செவி சாய்க்கவில்லை. பாரதப் போரில் பாண்டிய அரசும் பங்கெடுத்தது. இப்போரில் பாண்டிய வம்சாவளியே அழிந்தது. அப்போது சிவனின். மனைவியாக பாண்டிய மன்னரின் மகளாகிய பார்வதி  இருந்தார். தனது நாட்டு மக்களும், குடும்பமும் அழிவுற்றது  பார்வதியை நோகச் செய்தது. விரக்தியில் அவர் எங்கள் நிலத்தை நீங்கி ஏதோ ஒரு வனத்தில் சென்று பித்தி போன்று அலைந்தார். சக்தியைப் பிரிந்த சிவனும் தனது வலிமையை இழந்தார். அதன் பின் கடலின் மூர்க்கத்தால் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியது. எங்கள் இனத்தின் பெரும்பாலோர் இறந்தனர். நூறு பேர் மட்டுமே தப்பி இந்தத் தீவில் வாழ்ந்தனர். நாங்கள் அனைவரும் அவர்களின் சந்ததியினரே"


"பாண்டிய நாட்டுக்கு என்னவாயிற்று."


"பாண்டிய நாடு கடலிலிருந்து சற்று உள்ளே இருந்ததால் ஓரளவு தப்பியது. அவர்கள் இன்னும் வடக்கே சென்று மதுரையை தங்கள் தலைநகரமாக மாற்றினர்."


"அதன் பிறகு பாண்டிய நாட்டுடன் உறவைத் துண்டித்துக் கொண்டீர்களா?"


"ஆம். எங்கள் குலகுரு அகத்தியர் மனித இனத்துடன் நாங்கள் உறவாடியதே இந்த அழிவுக்கு காரணம் என்று கூறினார். பல ஆண்டுகளுக்குப்  பிறகு ஒரு தருணம் வரும். அப்போது லெமூரியரின் ஆட்சி இப்புவியில் நிகழும் என்றும் கூறினார்."


"அத்தருணம் எப்போது?"


"அந்த நன்னாள் நெருங்கி கொண்டிருக்கிறது தோழரே.அதற்குத் தான் உமது உதவி தேவை. இன்று இரவு எமது குகைக்கு வாருங்கள். அகத்திய குரு அனைத்தையும் கூறுவார்."


இரவின் போது குகைக்குள் ஒரு அறைக்கு சூசையை கந்தன் அழைத்துச் சென்றான்.  அங்கு  முதிய அகத்திய குரு தியானத்தில் அமர்ந்திருந்தார். சற்று தள்ளி அமைதியாக சூசையும் கந்தனும் அமர்ந்திருந்தனர்.


சிறிது நேரத்தில் அகத்தியரின் மூன்றாவது விழி திறந்தது. அவர் உடல் மீது பேரொளி பரவியது. கந்தன் மண்டியிட்டு அவரை வணங்கினான்.


அகத்தியரின் குரல் கம்பீரமாக ஒலித்தது.


"இன்றிலிருந்து இரண்டு திங்கள் கழித்த பௌர்ணமி அன்று லெமூரியரின் ஆட்சி தொடங்கும். அதற்கு சில காரியங்கள் செய்ய வேண்டும்."


"பௌர்ணமி அன்று பெரும் உற்சவம் நடத்த வேண்டும். அதில் சிவன் பங்கு பெறுவார். அவர் பக்கத்தில் பார்வதியும் அமர வேண்டும். சக்தி இல்லா சிவன் வெறும் ஜடம்."


"பார்வதி எங்கிருக்கிறார்?"


"பாண்டிய வம்சாவளியியைச் சேர்ந்த துர்கா என்னும் பெண் மதுரையில் வசித்து வருகிறாள். அவளை இங்கு அழைத்து வர வேண்டும். அதற்கு இந்த மனிதன் உதவி செய்வார்.”


அகத்திய குரு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.


கந்தன் சூசையிடம் தனது கோரிக்கையை வைத்தான். துர்காவை எப்படியாவது தீவிற்கு அழைத்து வரும்படி கெஞ்சினான்.


"இது நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியே ஏமாற்றி நான் கொண்டு வந்தாலும் உங்களுடன் அவள் வாழ்வது நிச்சயமில்லை."


"அவள் பாண்டியனின் குலம் என்றால் கண்டிப்பாக வருவாள். எங்களின் தலைவி ஆவதற்கு சம்மதிப்பாள்." 


சூசை அத்தீவை விட்டு சென்றான்.


                                       ——-*******——-


மதுரையில் இருந்த ஒரு மனநல மருத்துவமனையின் அறையில் துர்கா படுத்திருந்தாள். அருகில் அவள் தாய் அமர்ந்திருந்தாள்.


சற்று நேரத்தில் அறைக்கு மருத்துவர் வந்தார்.


"இன்றும் அவள் புத்தகங்கள் கேட்டு ஒரே ஆர்ப்பாட்டம். அவள் அப்பா பெரிய மந்திரியாக இருந்து என்ன பயன். மகள் இப்படி இருக்கிறாளே."


"இனி அந்த புத்தகம் கேட்டால் அவளிடம் கொடுத்து விடுங்கள். வேறு நாம் என்ன செய்ய முடியும்."


அந்த புத்தகம் துர்கா எழுதியது. தலைப்பு "லெமூரியரின் உலகம்." அவள் சரித்திரத்தில் பட்டப்படிப்பு படித்து முனைவர் பட்டத்திற்கு லெமூரியர் பற்றிய ஆரய்ய்ச்சி கட்டுரை எழுதியிருந்தாள். அதில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டம் இருந்ததற்கும், அங்கு லெமூரியர் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் வெளியிட்டிருந்தாள். ஆனால் அதை பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள் ஏற்கவில்லை. பல வருடங்கள் கழித்தும் அவள் முனைவர் பட்டப்படிப்பை முடிக்க இயலாமல் இருந்தது. அதன் பிறகு லெமூரியர் குறித்து புத்தகம் எழுதினாள். அதில் சிவன் உண்மையில் லெமூரியனாக இருந்திருக்க வேண்டும் என்ற வாதத்தை வைத்திருந்தாள். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மத வெறியர்கள் அவளை பலவாறு அவமதித்து ஏளனமும் செய்தனர். இந்த உளைச்சலால் அவளுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டது.


ஒவ்வொரு நாளும் லெமூரியர் குறித்த புத்தகங்கள் படிக்காமல் அவளால் இருக்க முடியாது. படித்து விட்டு "தூதர் வருவார். என்னை அழைத்துச் செல்வார்" என்று புலம்பியவண்ணம் உறங்குவாள்.


துர்கா நிலைகுத்திய விழிகளுடன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா இரவானதால் வீட்டிற்கு சென்று விட்டாள்.


நள்ளிரவில் ஒரு உருவம் அவள் அறைக்கு வந்தது.


துர்கா திடுக்கிட்டு எழுந்தாள்.


"என் பெயர் சூசை. உங்களை கண்டுபிடிக்க எனக்கு பல நாட்கள் ஆயிற்று. நான் வந்த காரணத்தை உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன்."


"நீர் ஒன்றும் சொல்ல வேண்டாம். நீர் தானே அந்த தூதர். என்னை லெமூரியர் உலகத்திற்கு அழைத்து செல்ல தானே வந்திருக்கிறீர். வாருங்கள் கிளம்பலாம்'"


சூசை அதிர்ச்சியுடன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான்.


துர்க்கா தன் கரங்களை நீட்டினாள். சூசை அவள் கரங்களை பற்றி மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.


                                      ———-********———




இரண்டு மாதங்கள் கழித்து சூசை மீண்டும் அத்தீவிற்கு வந்தான். அவனுடன் ஒரு பெண்ணும் வந்தாள். துர்காவை  தன்னுடன் அழைத்து வந்திருந்தான்.


கந்தனும் மற்ற லெமூரியர்களும் இருவரை வரவேற்றனர். சூசை துர்காவை அவர்களிடம் அறிமுகப் படுத்தினான்.


"இவள் தந்தை தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல்வாதி. துர்கா சரித்திரத்தின் மீது ஆவல் கொண்டவள். குறிப்பாக குமரிக்கண்டமும், உங்கள் லெமூரியர் இனம் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருபவள்.  லெமூரியர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்ன போது நம்ப மறுத்தாள். மிகவும் சிரமப்பட்டு நம்ப  வைத்தேன். உங்களுடன் சில காலம் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை படித்து மீண்டும் மதுரைக்கு சென்று விடலாம் என்று கூறி தான் சம்மதிக்க வைத்தேன். நீங்கள் உங்கள் தரப்பு கோரிக்கையை அவளிடம் வைக்கலாம்."


"எங்கள் கோரிக்கையை சிவனே வைப்பார். இன்று இரவு உற்சவத்திற்கு முன்பு அவர் அவதரிப்பார்."


அன்று இரவு உற்சவத்திற்காக அனைத்து லெமூரியரும் கூடினர். அவர்கள் முன் நர்த்தனமாடும் சிவன் சிலை ஒன்று பெரிதாக இருந்தது.


இரண்டு ஆசனங்கள் ஒரு மேடை மீது இருந்தது.


முன் வரிசையில் சூசையும் துர்காவும் அமர்ந்திருந்தனர். துர்கா பிரமையில் இருப்பது போல இருந்தாள். அவள் கண்கள் செருகிக் கொண்டு, தலையை உக்கிரமாக அசைத்தவண்ணம் இருந்தாள்.


முதலில் ஆடு, கோழி மற்ற  மிருகங்கள் பலியிடப்பட்டன. அவற்றின் இரத்தத்தை லெமூரியர்கள் உடலெங்கும் பூசிக்  கொண்டனர். முரசின் ஓசை மெதுவாக ஆரம்பித்து இரவு ஏற ஏற இடியாக ஒலித்தது.


லெமூரியர்கள் மது அருந்தி நடனமாடிக் கொண்டிருந்தனர். 


ஒரு இள வயது லெமூரியனை மேடை மீது கொண்டு வந்தனர். அவன் உடல் மீது முதலில் சந்தனமும் பிறகு குங்குமமும் தடவினர். அதன் பிறகு இரத்தத்தை அவன் முகம் முழுதும் பூசினர். அவன் கரங்கள் இரண்டும் உயரே தூக்க்கி பிணைத்து வைத்தனர்.  லெமூரியர் நடனமாடுவதை நிறுத்தினர். ஒரு முதியவர் மந்திரங்கள் ஓதினார். அதன் பிறகு இள லெமூரியனின் தலை துண்டிக்கப்பட்டது. துண்டிக்கும் முன் அவன் முகத்தில் தெரிந்த புன்னகை முண்டம் ஆன பிறகும் தொடர்ந்தது.


நள்ளிரவு ஆனதும் சிவன் தோன்றி மேடையின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவர் உடை எதுவும் அணியவில்லை. கழுத்தின் ஒரு நாகப் பாம்பு ஊர்ந்துக் கொண்டிருந்தது. தலையின் முடி முற்றிலும் அவிழ்ந்திருந்தது. அவர் துர்காவை மேடைக்கு வரும்படி சைகை செய்தார்.


துர்கா மேடை மீது நின்றாள். தன் உடைகள் அனைத்தும் களைந்தாள். ஒரு பாத்திரத்தில் இருந்த இரத்தத்தை தன் நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டாள். சிவன் அருகில் இருந்த சிம்மாசனத்தில்,  தன் யோனியின் பிளவு அனைவருக்கும் தெரியும் வண்ணம் காலை அகட்டி அமர்ந்தாள்.


சிவன் எழுந்து உரத்த குரலில் பேசினார்.


"இன்று நமது லெமூரியர் குலம் மீண்டும்  இப்புவியில் தழைக்கும் நாள். நாம் இனிமேலும் மறைந்திருக்க வேண்டாம்.  எனக்கு துணையாக பார்வதி  மீண்டும் அவதரித்து இருக்கிறாள். துர்கா எனக்கு துணையாக, எனக்கு சக்தியாக, நமது இனத்தின் தலைவியாக இருக்க சம்மதிப்பாள் என்று நம்புகிறேன்."


சிவன் துர்காவிற்கு சூலத்தை அளித்தார். சூலத்தைக் கையில் ஏந்தி ,சிவன் அருகில் நின்று, தன் கால்களை அவர் இடை மீது வளைத்து தனக்கு சம்மதம் என்று கூறினாள். லெமூரியர்கள் அனைவரும் உரத்து குரலில் அலறினர்.  சிவன் அவர்களை அமைதிப்படுத்தினார்.


"நாம் மனிதர்களை வாழும் நிலத்தை தாக்க வேண்டும் அவர்களை முற்றிலும் அழிக்க  வேண்டும். நம் முயற்சி வெற்றி அடைய,  மனித இரத்தத்தை தேவர்கள் கேட்கிறார்கள்.  இந்த மனிதனை பலி கொடுக்க வேண்டும்."


சிவனின் கை சூசையை சுட்டிக் காட்டியது.


லெமூரியர்கள் அனைவரும் சூசையை சூழ்ந்தனர். அவனை மேடைக்கு அருகே சிவன் முன் கொண்டு  வந்து நிறுத்தினர்.


சிவன் ஒரு வாளை கையில் ஏந்தி சூசையின் கழுத்தில் வைத்தார்.


அப்போது துர்காவின் குரல் இடியென ஒலித்தது.


"இதற்கு நான் சம்மதியேன். மனிதரும், லெமூரியரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.  அப்போது தான் இந்தப் புவியில் அமைதி நிலைக்கும். மேலும் எந்தத் தவறும் செய்யாத, நமது நன்மையை  நினைக்கும்  இந்த மனிதரை பலி கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்."


லெமூரியர் அனைவரும் வெறியுடன் கூச்சலிட்டனர்.  "கொல்! கொல்! " என்று கூக்குரலிட்டனர்.


சிவன் அவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.


"சக்தி சொன்னது அனைத்தும் உண்மை. சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால், இரு இனங்களும் ஒற்றுமையாக இருந்த நாட்கள் பொற்காலமாக இருந்தது. எப்போது பகை வந்ததோ நம் இனம் அழிய ஆரம்பித்தது. அதனால் சூசை என்ற பெயர் கொண்ட இம்மனிதன் நம் இரு இனத்தவருக்கும் பாலமாக இருக்க உதவி செய்வான். இவனைக் கொல்ல வேண்டாம்."


சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. ஒரு லெமூரியன் வேகமாக முன்னே வந்து தன் வாளால் சூசையின் கழுத்தை வெட்டினான். அனைவரும் செயலற்று நின்றனர்.


"மனிதர்கள் அழிய வேண்டும். அவரகள் இரத்தத்தை இந்திரன் முதலிய முன்னூறு கோடி தேவர்கள் கேட்கிறார்கள். மனித இரத்தத்தை குடிக்க தேவலோகத்து நாகங்கள் தவிக்கின்றன. பூமியில் அடியில் இருக்கும் பூத அசுரர் கோடிகள் "சாந்தி வேண்டும் சாந்தி வேண்டும்" என்று அலறுகின்றன. இனி ஒரு மனிதன் இந்த பூமியில் இருக்கக்கூடாது. நூறு கோடி மனிதர்களை கொன்று அவர்கள் இரத்தத்தை தேவருக்கும் அசுரருக்கும் அளிப்போம். அதன் பிறகு லெமூரியரின் புது யுகம் இவ்வுலகில் மலரும்."  


துர்கா மேடையிருந்து எம்பி குதித்து தன் கையிலிருந்த சூலத்தால், அந்த லெமூரியனின் மார்பில் குத்தினாள். பிறகு பித்து வெறியுடன்  கடலை நோக்கி நடந்தாள். அனைவரும் பயத்துடன் அவளுக்கு வழி விட்டனர்.


துர்கா கடலுக்குள் இறங்கி முழுதும் மூழ்கினாள்.  


மின்னலுடன் பேரிடி இறங்கியது. திடீரென்று பேரலைகள் அத்தீவை நோக்கி பாய்ந்தது. தொடர்ந்து வந்த இராட்சச அலைகள் அத்தீவை முழுங்கியது.


அடுத்த நாள் காலை சூரியன் குருதி  நிறத்தில் வானில் உதித்தது. காற்று செயலற்று நின்றது. அலைகள் அன்றி சலனமற்று கடல் இருந்தது. அங்கு ஒரு தீவு  இருந்ததற்கான அடையாளமே சிறிதும் இல்லை. எங்கு பார்க்கினும் நீரே நிறைந்திருந்தது. 


அமைதி. அமைதி.  கடலெங்கும் அமைதி. புவியெங்கும் அமைதி.


  

                                          ————**********————-